காஞ்சி சங்கர மடத்தில், ஒரு மாலை வேளை...மகா பெரியவரைத் தரிசிக்க ஏகக்கூட்டம் கூடியிருந்தது.
அப்போது, அவரது பார்வையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தென்பட்டார்.
அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ராமு என்ற இளைஞரை அழைத்து, ""கியூவிலே பதினைந்தாவது ஆசாமியா நிக்கிறானே ஒரு புள்ளையாண்டான்! அவன் சைசுக்கு சரியா இருக்கிறாப்லே ஒரு சட்டை, பேண்ட்துணி வாங்கிட்டு வா! அதுக்குரிய பணத்தை ஆபீசிலே வாங்கிண்டு போ! பக்கத்திலே இருக்கிற முதலியார்
ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!'' என்றார்.
ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!'' என்றார்.
ராமுவுக்கு பெரியவர் ஏன் இப்படி சொல்கிறார் என்ற விபரம் புரியவில்லை. ஆனாலும், 15 நிமிடங்களுக்குள் துணிமணியுடன் வந்து நின்றார். துணிமணிகளைப் பார்த்த பெரியவர், ""பேஷ்! பேஷ்! நன்னா இருக்குடா!'' என்று பாராட்டி விட்டு, ""நீ உடனே போய், ஒரு மூங்கில் தட்டில் நெறயபழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வச்சுண்டு, இந்த துணிமணிகளை அதுமேலே வச்சுடு. நான் சொன்னேன்னு சொல்லி, மடத்து மேனேஜர் கிட்டே 6250 ரூபாயை ஒரு கவர்ல போட்டு, அதையும் தட்டுலே வச்சுடு. என்ன பண்ணணுங்கிறதே அப்புறமா சொல்றேன்!'' என்றார்.
இதற்குள் அந்த இளைஞர் சுவாமிகள் முன் வந்து விட்டார். பெரியவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். ராமுவை அழைத்து, ""அந்த மூங்கில் தட்டை அவன் கையிலே கொடு.
அந்தப் பையனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நான் பூர்ண ஆசிர்வாதம் பண்றதா சொல்லு,'' என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.
அதன்படி, தட்டை அவன் கையில் ராமு கொடுக்க, அவன் குழப்பத்துடன் நின்றான்.
""ராமு! அவன் ரொம்ப குழம்பியிருக்கான். குழப்பம் ஏதும் வேண்டாம். அவன் வீட்டிலே பணத்தை பத்திரமா ஒப்படைக்கச் சொல்லு!'' என்றார் பெரியவர்.
இளைஞரும் ஏதும் புரியாமல் தட்டுடன் கிளம்பி விட்டார்.
அவரைப் போல குழம்பி நின்ற ராமுவிடம் பெரியவர்,""ராமு! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ, நம்ம மடத்துக்கு ரொம்ப சிரமமான காலம். அப்போ, ஒரு ஆறுமாசம் நான் வடதேசத்துக்கு யாத்திரை கிளம்பினேன். மடத்து வாசலுக்கு வந்தேன். எதிர்த்தாப்புலே ஒரு செட்டியார் மளிகைக்கடை வச்சிருந்தார். மடத்துக்கு அங்க தான் மளிகை சாமான்கள் பற்று வரவு கணக்கு. வாசல்ல என்னைப் பார்த்ததும், செட்டியார் வேகமா ஓடி வந்தார்.
"என்ன செட்டியார்வாள்! சவுக்கியமா? வியாபாரம் எல்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சேன்! அவர் வாயைப் பொத்திண்டு பவ்யமா, "சுமாரா போறது சுவாமி! கஷ்டமாத்தான் இருக்கு! பெரியவா வடதேசம் போவதாவும், திரும்ப அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க!' என்று மென்னு விழுங்கினார். பிறகு, "நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு! எனக்கும் கஷ்டம்! அதனாலே, உங்ககிட்ட குறையைச் சொல்லிக்கிறேன்,' என்றார்.
ஆறுமாதம் கழித்து வந்து பார்த்தால் கடை பூட்டியிருந்துச்சு! விசாரித்ததிலே, செட்டியார் மூணு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு காலகதி அடைஞ்சுட்டதா சொன்னா! அவரோட மனுஷாள்ளாம் எங்கே இருக்கான்னும் தெரியலே. அதற்கப்புறம் பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வச்சுண்டேன்! எண்ணூத்தி எழுபத்தஞ்சு முக்கால் ரூவா! அந்த பாக்கியை இன்னைக்கு தான் வட்டியும் முதலுமா தீர்த்து வச்சேன்! அந்த பையன் வேறு யாருமில்லே!
செட்டியாரோட பிள்ளை வயித்து பேரன். தாத்தாவுக்கு சேர வேண்டியதை, பேரன் கிட்ட அசலும் வட்டியுமா சேர்ப்பித்தாச்சு!
இனிமே கவலை இல்லை!'' என்றார்.
பெரியவர் செய்த இந்த கைங்கர்யம் நம் எல்லாருக்கும் ஒரு பாடம். யாருக்காவது கடன் கொடுக்க இருந்து, அவருக்கு கொடுக்க இயலாமல் போனால், அவர்களின் வாரிசைத் தேடிப்பிடித்து கொடுத்து விட வேண்டும்.
Jaya Jaya Shankara hare hare Shankara
No comments:
Post a Comment