Monday, September 13

Advice for true karma yogi

 "சூரியனைக் கும்பிடு, சகல புண்ணியமும் கிடைக்கும்"

விவசாயக் கூலி வேலை செய்யும் பெண்மணிக்கு
(என்ன ஆறுதல், என்ன கருணை)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள். பெரியவாள் எதிரில் கையைக் கூப்பிக்கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
"என்ன வேலை பண்றே?"
"வயல் வேலைக்குப் போறேன் சாமி. ஆறு பசங்கள், மாமியா, எங்கிட்ட இருக்கு. காலையில் சோறாக்கி வெச்சுட்டுப் போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியைக் கும்பிடறது? கோயிலுக்குப் போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே, சாமி....."
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
"சாமி கும்பிடணும்னு நினைக்கிறயே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்.!.
"காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வெச்சவுடனே மேற்கு திக்குப் பார்த்து ஒரு கும்பிடு போடு.
" நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்-சகல புண்ணியமும் கிடைச்சுடும்..."
பெண்மணி கண்களை துடைத்துக் கொண்டாள்.
'சூரியனைக் கும்பிடு-சகல புண்ணியமும் கிடைச்சுடும்!' என்ன, ஆறுதல்!
என்ன,கருணை!.
பெரியவாள் பலவகையான பழங்களை அந்தப் பெண்மணிக்குக் கொடுக்கச் சொன்னார்கள்.
தீனமாக வந்த மங்கை திரும்பிப் போகும்போது, அரசியாக - மங்கையர்க்கரசியாகப் போனாள்.
பெரியவாள் ஞான சூரியன். கும்பிட்டாலே போதும் - சகல புண்ணியமும் கிடைச்சுடும்!.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...