ஏரிகாத்த ராமர் – Temple in Madhuranthagam
நின்றான், கிடந்தான், அமர்ந்தான் என பல திருக்கோலங்களில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் புரிவது எம்பெருமானின் சிறப்புக்களுள் ஒன்று. அவனது லீலைகளோ கணக்கில் அடங்காதது. ஆண்டுக் கணக்கில் தம்மை நோக்கி தவம் செய்பவர்களைத் தவிக்க விட்டு வேடிக்கை பார்ப்பது அவன் வழக்கம். அதேசமயம் சமயம் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு அருள் புரிந்து தனது அடியவர்களாக ஆக்கிக் கொள்வதும் அவனது விளையாட்டுக்களில் ஒன்றுதான். அதற்கு சாட்சியாக எத்தனையோ திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்று மதுராந்தகம் ஏரி காத்த ராமர் ஆலயம்.
சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது இவ்வாலயம். ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபண்டக மஹரிஷியின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். மஹரிஷியின் வேண்டுதல்படி அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். அந்த ஆலயமே ஏரிகாத்த ராமர் ஆலயமாக இன்று விளங்குகிறது. கோயிலின் கருவறையில் சீதையின் கைகளைப் ப்ற்றிய நிலையில் ராமர் நிற்கிறார். சீதையின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக ராமர் விபண்டகருக்குக் காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது. தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரை தரிசிக்கின்றனர். விபண்டக மஹரிஷியும் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. ஜனகராஜாவின் மகளாக வளர்ந்ததால் இப்பெயர். கோயிலுக்குப் பின்புறம் ஏரி உள்ளது. ராமர், ஏரியைக் காத்து மக்களை ரட்சித்தது தனி வரலாறு.
கலோனெல் லையோனெல் ப்ளேஸ் (Colonel Lionel Blaze) என்னும் ஆங்கிலேய அதிகாரி 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறுவார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.
ஒருநாள்… அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும். அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும்படி வேண்டிக் கொண்டனர்.
அந்த அதிகாரி உடனே மக்களிடம், ”நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.
உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.
”ஓஹோ.. அப்படியா? ராமர் என்று ஒருவர் இருந்தால் அதை எல்லாம் செய்யட்டும் பார்ப்போம்” என்று கிண்டலாகச் சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.
நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி. சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.
வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம் இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார். கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது. பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.
ஏரியின் கரை மீது உயரமான இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் மிக அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு கணம், ஒரே கணம் தான் அந்தக் காட்சியைக் கண்டார். அடுத்த கணம் அவர்கள் மறைந்து விட்டார்கள்.
அவ்வளவுதான். அந்த அதிகாரியின் உடல் நடுங்கியது. உள்ளம் கலங்கியது. இந்துக்கள் மடையர்கள் இல்லை; அவர்கள் தெய்வமும் வெறும் கல் இல்லை என்று உணர்ந்து கொண்டார். அவர்கள் மத வழக்கப்படி அப்படியே கீழே விழுந்து மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தார்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது. ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன் அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியை புதிதாகக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார். நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வேட்டிலும் பதிப்பித்தார். “இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது” என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்க முடியும்.
மதுராந்தகம் ஏரி
ஏரி உடையாமல் காத்ததால் இவர் ’ஏரி காத்த ராமர்’ என்று அழைக்கப்படுகிறார். ராமர் ஆலயம் என்றாலும் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் கருணாகரப் பெருமாள் பிரதானத் தெய்வமாகக் காட்சி அளிகிறார். விபாண்டகரால் பூஜிக்கப்பட்ட இவருக்கே விழா நடக்கிறது. சீதையைத் தேடிய ராமர் இவரை பூஜித்ததாகவும் ஐதீகம். ராமருக்கும் உற்சவ வடிவம் உண்டு. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சாந்த நரசிம்மராக சிங்க முகமில்லாமல் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு “பிரகலாத வரதன்” என்பது பெயர். ஸ்வாதி நக்ஷத்திரன்று இவருக்கு விசேஷ ஆராதனைகள் நடக்கின்றன. சக்கரத்தாழ்வார் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இவருக்குக் கிழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பின்புறமுள்ள யோகநரசிம்மர் நாகத்தின் மீது காட்சி தருகிறார்.
இராமானுஜருக்கு பெரிய நம்பி ‘பஞ்சசம்ஸ்காரம்’ செய்து வைத்த தலம் இதுதான். இருவரும் ஒரே சன்னதியில் காட்சி தருகின்றனர். பெரிய நம்பி பூஜித்த கண்ணன் சிலையும் இங்கே உள்ளது. மழலை பாக்கியம் வேண்டி இவரை வழிபடுகின்றனர். ராமானுஜருக்கு தீட்சை கொடுக்கப் பயன்படுத்திய சங்கு, சக்கர முத்திரைகள் இக்கோயிலில் உள்ளன. காவி வஸ்திரம் அணிந்த ராமானுஜர் இத்தலத்தில் வெண்ணிற ஆடையில் காட்சி தருகிறார். காரணம், இல்வாழ்க்கையில் இருந்த ராமானுஜர் துறவு மேற்கொள்ளும் முன் இங்கு தீக்ஷை பெற்றதால்தான். மூலவர், உற்சவர் இருவருக்குமே வெண்ணிற ஆடையே அலங்காரம் செய்யப்படுகிறது. ராமநவமி மிகவும் விசேஷத்துடன், ஒரே நாளில் ஐந்து வித அலங்காரங்களுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தேர்த்திருவிழாவும் நடக்கிறது. ஆனிமாத ப்ரமோற்சவத்தில் ராமர் புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட ஒரு தேரிலும், கருணாகரப் பெருமாள் மற்றொரு தேரிலும் உலா வருவது கண்கொள்ளா காட்சி.
ஏரி காத்த ராமரைத் தொழுவோம். நம் எல்லாத் துன்பங்களையும் களைவோம்!
No comments:
Post a Comment