இன்று ரமண மகரிஷியின் ஜெயந்தி தினம் - அவர் பாதம் பணிவோம்.
திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில், மரநிழலில் ரமணர் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கு வந்தார். தரையில் அமர முயற்சித்தார். ஆனால், அவரால் காலை மடக்க முடியவில்லை. எனவே, ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து அதில் உட்கார்ந்தார். உபதேசம் செய்யும் குரு கீழேயும், பக்தர்கள் ஆசனத்திலும் அமர்வது கூடாது என்ற விஷயத்தை வெளிநாட்டுக்காரர் அறிந்திருக்க நியாயமில்லை. இதைக் கண்ட ஆஸ்ரம நிர்வாகிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வெளிநாட்டுக் காரரிடம் வந்து, கீழே அமரும்படி மெதுவாக தெரிவித்தார். அவரோ, தன்னுடைய இயலாமையைத் தெரிவித்தார். அப்படியானால் அங்கிருந்து வெளியேறும்படி நிர்வாகி அறிவுறுத்தினார். வாடிய முகத்துடன் ஆஸ்ரமத்தை விட்டுப் புறப்பட்டார் வெளிநாட்டவர்.
அப்போது ரமணர் நிர்வாகியிடம், என்னப்பா ஆச்சு? என்று அழைத்தார். ஒண்ணுமில்லே சுவாமி. அவரால் கீழே உட்கார முடியாதாம். நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அதனால் தான் வெளியேறும்படி அனுப்பி விட்டேன், என்றார் மெதுவாக. ரமணர், அந்த நிர்வாகியிடம் மரத்தை அண்ணாந்து பார்க்கச் சொன்னார். அதில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. இதோ மரத்து மேலே குரங்கு இருக்கு பார். அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு! அதையும் வெளியில் அனுப்பி விடுவோமா? என்றார் பவ்யமாக. அமைதியாக நின்ற நிர்வாகியிடம், யாரும் உலகத்தில உசத்தியும் இல்லே! தாழ்ச்சியும் இல்லே! அவரை உடனே கூப்பிடுங்க! என்று அழைத்து வரச் சொன்னார். உயர்வு தாழ்வு கருதாத ரமணரின் ஞானநிலையை அனைவரும் போற்றினர்.
பேசாமலே மாணிக்கவாசகருக்கு முக்தி நிலைக்கான பாதை காட்டிய தெய்வம் யார் என்றால் சிவனின் தட்சிணாமூர்த்தி கோலம் என்போம். அந்த தட்சிணாமூர்த்தியே நம் மத்தியில் சமீபகாலத்தில் வாழ்ந்து விட்டும் சென்றிருக்கிறார். இதோ! அந்த அதிசயம்! திருவண்ணாமலையைச் சேர்ந்த ராகாவாச்சாரியார் என்ற பக்தர், ஆஸ்ரமத்தில் இருந்த ரமணரைப் பார்க்க வந்தார். அவர் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர். பகவத்கீதை அவரது கையில் இருக்கும்.
யாருமில்லாத போது, ரமணரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவர் ரமணரை நெருங்கவும், ஏற்கனவே அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் புறப்பட்டு விட்டனர். ஆஹா...எதிர்பார்த்து வந்த தனிமைச்சூழல் கிடைத்து விட்டதே! என்று ஆவலுடன் அவர் அருகே நெருங்கியவுடன், நீங்கள் பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவர் என்பது உங்கள் கையிலுள்ள கீதையைப் பார்த்தாலே புரிகிறது. கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்?என்றார்.
உங்களது உண்மையான வடிவத்தை தரிசிக்க எனக்கு ஆசை, காட்டுவீர்களா? என்ற ராகவாச்சாரியார் கண்முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரமணரின் பின்னால் தோன்றிய ஒளிவட்டத்தில், தட்சிணாமூர்த்தி வடிவம் தெரிந்தது. மவுனமாக இருக்க வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தியவர் ரமணர். ராகவாச்சாரியாருக்கு இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவானது. தட்சிணாமூர்த்தியும் அமைதியே வடிவாக சின்முத்திரை காட்டி, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து, தன்னைச் சரணடைவோருக்கு முக்திநிலை அருள்கிறார். இதையே ரமணர் தன்னிடம் பேசாமல் பேசிவிட்டதாக உணர்ந்தார்.
No comments:
Post a Comment