Raja Rajeshwari Temple – Nanganallur
ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலுக்கும் போகும் வாய்ப்பு பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கிறது.
இந்தக்கோயிலில் அமர்ந்து அருள் பாலிக்கும் அன்னை ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி .......இவள் இங்கு அமர்ந்து அருள் புரிகிறாள். இந்த அம்பாள் இங்கு வந்து கோயில் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தவர் நம் மகா பெரியவாள் அவர்கள் தான். அவர்தான் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சுவாமிகள் பலவருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்........சுவாமிகள் பரங்கிமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் குழுவுடன் வந்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ. நந்தீஸ்வரர் கோயில் பரங்கிமலையில் இருக்கிறது.
வரும் வழியில் திரிசூலம் என்ற இடத்தில் திரிசூலநாதர், அம்பாள் திரிபுரசுந்தரியைத் தரிசித்து வரும் போது பவழந்தாங்கல் என்ற இடம் வந்தது. அங்கு பெரிய அரசமரம் நிழல் கொடுத்துக் கொண்டிருக்க சுவாமிகள் அந்த இடத்தில் களைப்பாறினார். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் என்று பகதர்கள் குழு சற்று நகர்ந்து நின்றுவிட்டனர். மகாபெரியவாள் தனித்துவிடப்பட்டார். திடீரென்று அந்த மகானுக்கு நாக்கு காய்ந்து போக நாவரண்டு விட்டது அவர் தன் சன்னமான குரலில் ஒரு சிஷ்யரை அழைத்தார். ஆனால் அவருக்குக்காதில் விழவில்லை.
அந்த நேரத்தில் சின்னப்பெண் கையில் சொம்புடன் வந்து நின்றாள்
"மஹாபெரியவரே இந்தாருங்கள் தண்ணீர் கேட்டீர்களே நான் கொண்டுவந்திருக்கிறேன். நீர் அருந்துங்கள்" என்றபடி சொம்பை நீட்டினாள். அவரும் நீரைப்பருகியபிறகு சொம்பைக்கொடுக்க அவளைப்பார்த்தபோது அந்தச்சிறுமி அங்கில்லை.
உடனே தன் சிஷ்யரை அழைத்து "நீங்கள் தண்ணீர் சொம்புடன் அனுப்பிய பெண் எங்கே?" என்று கேட்டார்
சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு..!
"எங்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் ஒரு சிறுமியையும் அனுப்பவில்லையே "என்றனர் .
உடனே தியானத்தில் ஆழ்ந்த சுவாமிகள் வந்தது ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி என்பதை உணர்ந்தார்.
பின் அங்கிருந்த பக்தர்களை அழைத்தார்.
"இங்கு எங்கேயோ அம்பாள் புதைந்திருக்கிறாள் அவளை எப்படியேனும் வெளியே கொண்டு வந்து கோயில் கட்டுங்கள்" என்றபடியே தன் பாத யாத்திரையைத் தொடர்ந்தார்.
பழழந்தாங்கல் மக்களும் ஒருமனதாக அந்த இடத்தைத்தோண்ட கிடைத்தது ஒரு அம்பாள் விக்கிரஹம். குழந்தை வடிவில் இருந்தது. மேலும் தோண்ட இன்னொரு அம்மனும் கையில் தட்டுப்பட அவள் சண்டிகேஸ்வரி யாக இருந்தாள்.
எல்லோருக்கும் பரம சந்தோஷம். மஹாபெரியவாளிடம் அவர்கள் விஷயத்தைச்சொல்ல அவர் விக்ரபிரதிஷ்டை செய்ய வந்து அம்பிகைக்கு "ஸ்ரீவித்யாராஜராஜேஸ்வரி" என்ற நாமம் சூட்டினார்.
பின் என்ன கொஞ்சம் கொஞ்சமாக கோயில் கட்டும் பணி தொடர்ந்து கருவறை முன் மண்டபம் பரிவார தேவதைகள் எல்லாமே மகாபெரியவாள் சொற்படி அமைக்கப்பட்டு இன்று எல்லோருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள்.
அவளைப்பார்க்க வேண்டுமானால் குறுகிய இடத்தில் படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும் ஐயப்பன் கோயில் படிகள் போல் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தேவதை இருக்கிறாள். மேலே அம்பாளின் அழகே அழகு. வர்ணிக்க வார்த்தைள் இல்லை.
அந்தக் கண்களை சொல்லவா புன்னகிக்கும் உதடுகளைச்சொல்லவா நீண்ட நேர்த்தியான நாசியைச்சொல்லவா .......எல்லாமே அத்தனை அழகு. நிச்சியமாக ஒரு தனி சக்தி நம்மேல் பாய்வதை உணர முடிகிறது, மாசி மாதம் அந்த ஆதவனும் ஆறு நாட்கள் காலை ஆறுமணிக்கு அம்பாள் மேல் தன் கிரணங்களைப்பாய்ச்சி வணங்குகின்றான்.
அம்பாள் அப்போது ஜ்வலிக்கும் அழகே அழகு!
இந்த நேரத்தில் சூரிய வழிபாடு என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது
சிவன் கோயிலில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல் இங்கு சண்டிகேஸ்வரி அமர்ந்திருக்கிறாள். குழந்தை பாக்கியம், கல்வி செல்வம் என்று பல வழங்கி பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் ராஜராஜேஸ்வரியை நாமும் தரிசித்து வணங்கி அவள் அருளைப்பெறலாமே.
Nice info
ReplyDelete