ரத யாத்திரை ஸ்பெஷல்:
நேற்று ஸ்ரீ ஜெகந்நாத பிரபு தேரேறி ராணி குண்டிச்சா இருக்கும் கோவிலுக்கு, தனது வாக்கை காப்பாற்ற கிளம்பி விட்டார்.
அவருடன் தமயனும், தங்கையும் கூடவே கிளம்பி விட்டார்கள்.
அநேகமாக இன்று மாலைக்குள் அங்கு போய் சேர்ந்து விடுவார்.
ரத யாத்ரா அன்று காலை கிச்சடி பிரசாதம்.அதை சாப்பிட்டு விட்டு தான் கிளம்புவார்கள்.முதலில் தமையன் தான் கிளம்புவார்.அவரை பலர் தூக்கிக்கொண்டு வந்து தேரில் ஏற்றுவார்கள்.
மூலவர்களையே கொண்டு வருவதால்,மிக சிரமப்பட்டு, அதி ஜாக்கிரதையாகத்தான் கொண்டு வருவார்கள்.
பரம்பரை,பரம்பரையாக இதை செய்தவர்களுக்கு மட்டுமே அந்த நெளிவு சுளிவு தெரியும்.
அதனால் அவர்களே தான் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
கோவிலில் இருந்து படிக்கு வருவார்கள்.
இறங்க வேண்டிய படிகள் மொத்தம் 22.வெகு ஜாக்கிரதையாக இறக்க வேண்டும்.இந்த படிகளில் ஏறுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று
சொல்லப்படுகிறது.
படிகள் முடிந்து வெளியே வரும் போது ஒரு ஒடுக்கமான வழியாக தான் வெளியே வரவேண்டும்.
இந்த இடத்துக்கு குமுட்டி கர் (Gumuti Ghar ) என்று பெயர். இதன் வழியே,விக்கிரஹங்களை சேதம் இல்லாமல் திருப்பி,வெளியே கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அவர் அருளால்
மட்டுமே இது, இதுவரை நடந்து வருகிறது.
ஒரு மாதிரி விக்கிரஹங்களை கொண்டு வந்து அவர் அவர் தேர்களில் வைப்பார்கள்.
தரையிலிருந்து தேர் உயரம் அதிகம். அதனால் மூங்கிலால் சாரம் கட்டியிருப்பார்கள். அதன் வழியே நல்லபடியாக கொண்டு வைத்த பின் தான் எல்லோருக்கும் மூச்சே வரும்.
விக்கிரஹங்களுக்கு, தலையில்,நெட்டியானால ஒரு கிரீடம் அணிவித்திருப்பார்கள்.சுமந்து கொண்டு வரும்போது அந்த கிரீடங்கள் அழகாக ஆடும்!பக்தர்கள் சிறு,சிறு துண்டுகளை அவற்றில்
இருந்து பிய்த்து எடுத்துக்கொள்வார்கள்.
வீட்டில் வைத்தால் சுபம் என்ற நம்பிக்கை.
இந்த கிரீடத்துக்கு தாஹியா என்று பெயர்(Thaahiyaa). தேரில் வைக்கும் போது, அந்த கிரீடங்களில் ஒன்றுமே
அநேகமாக இருக்காது!பக்தர்கள் கொண்டு போய் விடுவார்கள்.
முதலில் பூரி சங்கராச்சாரியார் வந்து நமஸ்கரித்து விட்டு போன பின், பூரி ராஜா கஜபதி திவ்ய சிங்க தேவ் பல்லக்கில் வருவார்.
அவருக்கு புருஷோத்தம் என்றும் நடமாடும் ஜகந்நாதர் என்றும்
பெயர்கள் உண்டு.
வெள்ளை உடையில்,
வெள்ளை தலைப்பாகை அணிந்து வருவார்.
ஒவ்வொரு தேராக ஏறி, அர்ச்சகர் சந்தன தண்ணீர் தெளிக்க,
வெள்ளிப்பூண் போட்ட துடைப்பத்தால், தேரை நால் புறமும் பெருக்கி சுத்தம் செய்வார்.பிறகு வணங்கி விட்டு இறங்கி, வந்த பல்லக்கிலேயே
திரும்பி அரண்மனைக்கு போய் விடுவார்.
அடுத்து தேர்களை வடம் பிடித்து இழுக்க ஆரம்பிப்பார்கள்.
முதலில் பலபத்திரர் தேர், பிறகு சுபத்திரா தேர், அதன் பிறகு தான் ஜெகந்நாதரின் தேர் என ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இழுக்கப்படும்.
பலபத்திரர் தேர் பெயர் தாளத்வஜ்(Thaaladhwaj ).
பனைக்கொடி என்று பொருள். பச்சை மற்றும் சிவப்பு துணியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.உயரம் கிட்டத்தட்ட 43 அடிகள்,14 சக்கரங்கள்.
நான்கு வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரோட்டி மாதலி. பலபத்திரர் ஆதிசேஷனின் அம்சம். அதனால் அவர் தேரின் மேல் அனந்த நாகர் இருப்பார்.வாசுகியே
தேர் வடமாகி
இழுக்கப்படுவதாக ஐதீகம்.
சுபத்திரா தேவியின் தேர் பெயர் தர்ப்பதலன் (Dwarpadhalan).
அகங்காரத்தின் அழிவு என்று பொருள். தேவதலன் என்றும் சொல்கிறார்கள். கறுப்பு ,சிவப்பு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 42 அடிகள் உயரம்,12 சக்கரங்கள்.
நான்கு பழுப்பு பெண் குதிரைகள் பூட்டப்பட்ட தேர். அர்ஜுனன் தான் தேரோட்டி! ஸ்வர்ணசூட நாகினி தான் வடம்.
ஜெகந்நாதரின் தேரின் பெயர் நந்திகோஷ் (Nandhighosh )இது தான் எல்லாவற்றையும் விட பெரியது. மஞ்சள்,சிவப்பு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 44 அடிகள் உயரம்,16 சக்கரங்கள்.
நான்கு வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்டது. இங்கு ஒரு வேடிக்கை! பலபத்திரர் நல்ல சிவப்பு. அதனால் அவருக்கு கறுப்பு குதிரைகள்!
ஆனால் ஜெகந்நாதரோ நல்ல கறுப்பு !அதனால் அவருக்கு வெள்ளை குதிரைகள்! தேரோட்டி பெயர் தாருகன். சங்க சூட நாகர் தான் தேர் வடம்.
பக்தர்கள் உற்சாகமாக இழுப்பார்கள். பல பத்திரரும் சுபத்திரையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நகர்வார்கள். ஜகந்நாதர் குறும்புக்காரர்! அவருக்கு தோன்றினால் நின்று விடுவார்! நகரவே
மாட்டார்!
பிறகு எல்லோரும் சேர்ந்து கெஞ்சுவார்கள்!கொஞ்சுவார்கள்!!!அப்புறம் சாவதானமாக கிளம்புவார்! சில சமயம் மட மடவென்று ஓடி குண்டிச்சா கோவில் சேர்ந்துவிடுவார்!எல்லாம் அவர் இஷ்டம்!
அவர் இந்த மாதிரி சோதிப்பதில் பக்தர்களுக்கு அலாதி சந்தோஷம்!அவரது செல்லப்பெயர் காளியா!கறுப்பன் என்று பொருள்."காளியா அப்படிதான்! இஷ்டம் இருந்தால் தான் நகருவான்! இல்லை என்றால் நின்று விடுவான்" என்று பக்தர்கள் பெருமையாக பேசிக்கொள்வார்கள்.
அதனால் தானே அவன் பெயர் மாயவன்?குண்டிச்சா கோவிலுக்கு, மாவுஸி மா மந்திர் என்றும் பெயர் உண்டு.மாவுஸி என்றால்,பெரியம்மா அல்லது சித்தி என்று பொருள்.
No comments:
Post a Comment