பெரியவா சரணம்
ஒரு முறை மகா சுவாமிகளை தரிசிக்க ஆசார சீலர்களான வைணவர்கள் சிலர் சங்கர மடம் வந்தனர்..
அவர்களில் ஒருவர் மட்டும் சற்று மாறுபட்டவராக இருந்தார்.. எங்கோ வெறித்துப் பார்த்த படி அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருந்தார்.. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்பட வில்லை..
அவரை சுட்டிக் காட்டிய வைணவர்கள், "சுவாமி... இவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. பார்க்காத வைத்தியமில்லை.. ஆனால் குணம் ஆகவில்லை.. ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களை தரிசித்தால் குணம் உண்டாகும் என்று பெரியவர்கள் சிலர் சொல்லவே, குணசீலம், சோளிங்கர் கோயில்களுக்கு அழைத்துச் சென்றோம்.. கடைசி முயற்சியாக தங்களை தரிசிக்க வந்தோம்.. அருள் புரியுங்கள்.. " என்றனர்..
" நல்லது.. எல்லோரும் இப்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லுங்கள் " எனக் கட்டளையிட்டார் பெரியவா..
அனைவரும் ஒரு மித்த குரலில் சொல்லத் தொடங்கினர்..
கடைசியில் மகா சுவாமிகள் குறிப்பிட்ட மனிதருக்கு துளசி தீர்த்தம் கொடுத்தார்.. அங்கிருந்த பலசாலியான மனிதர் ஒருவரை அழைத்து, பாதிக்கப்பட்டவரின் தலையில் ஒரு குட்டும் வைக்கச் சொன்னார்..
எல்லோரும் திகைத்து நிற்க, மனநிலை பாதிப்பு ஏற்பட்டவரின் தலையில் கணீரென்று குட்டு வைத்தார் அந்த மனிதர்..
மறு கணம் நிகழ்ந்தது ஓர் அதிசயம்.. சட்டென்று தலையைத் தடவிய படி அந்த வைணவர், "நான் எங்கே இருக்கிறேன், இங்கு எப்படி வந்தேன்?" என்றார் ஏதும் புரியாமல்..
"எல்லாம் மகா சுவாமிகளின் அநுக்கிரஹம்" என நெகிழ்ந்தனர் வைணவர்கள்..
"நீங்கள் நம்பிக்கையுடன் பெருமாள் திவ்ய தேசங்களை தரிசித்தீர்களே... அந்த புண்ணியத்தால் தான் பலன் கிடைத்தது " என்றார் மகா சுவாமிகள்..
ஜகத்குரு!
(இன்றைய தினமலர் ஆன்மீக மலரில் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் பதிவு...)
No comments:
Post a Comment