Wednesday, March 5

Tiruchendur Murugan – Dutch Attack Incident

 

திருச்செந்தூரில் செந்தில் வேலவன் நிகழ்த்திய அற்புதம் (ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு):
முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். 1648 ஆம் ஆண்டு கடல் மார்கமாக வந்த டச்சுப் (Dutch) படையினர் திருச்செந்தூர் திருக்கோயிலைக் கைப்பற்றினர். அப்பகுதியை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் சிறந்த முருக பக்தர். பெரும் படையுடன் சென்று டச்சுப் படைகளை எதிர்க்க முனைந்தார். எனினும் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.
திருக்கோயில் நகைகளை கைப் பற்றியதோடு நில்லாமல், ஷண்முகர் - நடராஜர் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளையும் (தங்க விக்கிரகங்கள் எனக் கருதி) எடுத்துக் கொண்ட டச்சுப் படையினர், மீண்டும் கடல் வழியே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மேலும், செல்லும் வழியிலேயே உற்சவ மூர்த்திகளை உருக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அச்சமயம் கடல் நீரில் திடீரென்று பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. காற்றும் பெரும் வேகம் கொண்டு சூறாவளி என மாற, கப்பல் கடுமையாக ஆட்டம் காணத் துவங்கியது. டச்சுப் படையினர் மிகவும் கலங்கி, ஏக மனதாக முடிவெடுத்து, தாங்கள் கைப்பற்றிய உற்சவ மூர்த்திகளை கடலில் சேர்ப்பித்து விட்டனர்.
அந்த கணமே கடல் நீரின் கொந்தளிப்பு தணிந்து, காற்றின் வேகமும் சீர் அடைந்தது கண்டு டச்சுப் படையினர் பெரு வியப்புற்றனர். இந்த வரலாற்று நிகழ்வு டச்சு நாட்டின் ராணுவ குறிப்புகளிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின், உற்சவ மூர்த்திகளை மீண்டும் செய்விக்கும் பணி தொடங்கப் பெற்றது.
அதே சமயம், வடமலையப்பர் என்னும் பக்தரின் கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றி, உற்சவ மூர்த்திகள் கடலில் எழுந்தருளி இருக்கும் இடத்தை காண்பித்து, அடையாளமாக கருடப் பறவையும் தோன்றும் என்று அறிவித்து அருளினார். திருவருள் திறத்தை வியந்து போற்றிய வடமலையப்பர், கடலில் மூர்த்திகளை தேடும் பணியைத் துவங்கினார்.
குறிப்பிட்ட இடத்தில், கருடப் பறவையும் வானில் தோன்ற, கடலுக்கு அடியில் நீந்திச் சென்று உற்சவ மூர்த்திகளை வெளிக் கொணர்ந்தனர். திருச்செந்தூர் திருக்கோயிலில் ஒரு சுபயோக தினத்தில் மீண்டும் ஷண்முகப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர். திருச்செந்தூர் வாழ் மக்களும், தங்கள் வாழ்வோடும், ஆன்மாவோடும் கலந்து விட்ட ஷண்முகக் கடவுளை போற்றித் துதித்தனர்

image
செந்திலாண்டவன்.... திருவிளையாடல்... வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா.... வேலுண்டு வினையில்லை.. மயிலுண்டு பயமில்லை.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...