Wednesday, March 6

Animal Sacrifice to please GOD?

 

பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை295082_334677883267033_883514839_n கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.
“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.
“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”
இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.
துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.
“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.
“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.
“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.
“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”
“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...