Monday, August 7

Curing Grace

அவளை யாரும் தொடாதீங்கோ !
அது ஒரு சாதுர்மாஸ்யம். பெரியவா காஞ்சியில் இருந்தார்.
ஒரு அம்மா தன்னுடைய இரண்டு பெண்களில் இளையவளோடு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தாள்.
மூத்தவளுக்கு கல்யாணமாகி நல்லபடிஸெட்டில் ஆகிவிட்டாள்.
இளையவள், M.A படித்துவிட்டு வேலை பார்த்து வந்தாள். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த அம்மா.

பயங்கரமான ஸோதனை அப்போதுதான் ஆரம்பித்தது!
நன்றாக இருந்த அந்தப் பெண், திடீரென்று ஏதோ ஒருமாதிரி பேசவும், சிரிக்கவும் ஆரம்பித்தாள். அந்த சிரிப்பில் ஏனோ ஒருவித அமானுஷ்யம் கலந்திருக்கும்! வயஸுக்கேத்த பேச்சோ, பழக்கமோ எதுவுமே இல்லாமல், ஸம்பந்தா-ஸம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.
அக்கம் பக்கம் இருப்பவர்கள், பயந்த கோளாறு, காத்து கருப்பு வேலை, மூளைக் கோளாறு என்று சொல்லி, தங்களுக்கு தெரிந்த உபாயங்களை, வைத்யங்களை சொல்ல ஆரம்பித்தனர்.
“வேலூருக்கு கூட்டிகிட்டு போயி மூளையில ஒரு ஆபரேஷன் பண்ணினா எல்லாம் ஸரியாயிரும்”
டாக்டர்கள், எக்கச்சக்க ஸோதனைகளுக்கு பிறகு சொன்னார்கள்.
அம்மாவுக்கோ ஏகக் கவலை!
கல்யாணம் பண்ணப்போற ஸமயத்தில் இப்படி ஒரு கஷ்டமா?
திக்கற்றவற்கு கதியான பெரியவாளைத் தேடி, பெண்ணைக் கூட்டிக்
கொண்டு காஞ்சிக்கு வந்தாள்.
ஆனால், வந்த அன்று ஸாயங்காலம் பெரியவாளை தர்ஶிக்க முடியவில்லை. இரவு முழுவதும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில், அந்தப் பெண்ணை வைத்துக் கொண்டு “ஜய ஜய ஶங்கர, ஹர ஹர ஶங்கர” என்று ஜபித்த வண்ணம் இருந்தாள்.
அந்தப் பெண்ணோ, பயங்கரமாக கத்திக் கத்தி மயக்கம் அடைந்து விட்டாள்.
மறுநாள் காலையில் ஶ்ரீமடத்துக்கு சென்று பெரியவாளிடம் கதறி விட்டாள் அந்த அம்மா.
“பெரியவாதான் காப்பாத்தணும்! திடீர்னு புத்தி பேதலிச்ச மாதிரி ஆயிட்டா…! நல்ல கொழந்தை, கல்யாணத்துக்கு பாத்துண்டு இருக்கறச்சே, இப்டி ஆய்டுத்து…. காப்பாத்துங்கோ! “….
பெரியவா முன் பெட்டிப்பாம்பாக அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
பெரியவாளுடைய அருட்கடாக்ஷம் அவள் மேல் விழுந்தது.
தொடர்ந்து மூன்று நாட்கள் ஶ்ரீமடத்துக்கு வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார்கள்.
மூன்றாவது நாள், பெரியவா அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டே….. உத்தரவிட்டார்!.....
“அபிராமி அந்தாதி சொல்ல ஆரம்பி!…”
“தாரமர்க் கொன்றையும் ஷண்பக மாலையும் சாற்றும், தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே!..”
பெரியவாளுடைய கமலத் திருவடிகளை பார்த்துக் கொண்டே அந்த பெண்ணும், கணீரென்று சொல்ல ஆரம்பித்தாள் !
அப்போதுதான் அந்த அதிஸயம் நடந்தது!
வரிஸையாக பாடிக் கொண்டிருக்கும்போதே நடுவில் மயக்கமடைந்தாள். அம்மாவும் பக்கத்திலிருந்த பெண்களும் அவளைத் தொடப் போனார்கள்.
” யாரும் தொட வேணாம்! அவ அப்டியே இருக்கட்டும்”
ஆக்ஞை பிறந்தது!
கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவள், முற்றிலும் பூரணமாக குணமடைந்திருந்தாள்! பழைய அமானுஷ்ய குரலும், பார்வையும், பேச்சும்…. இருந்த இடம் தெரியாமல் ஓடியது!
“பரமேஶ்வரா! என் அம்மா! பகவதீ!….”
அம்மாவும், பெண்ணும் பெரியவாளின் திருவடிகளில் கண்ணீரைக் காணிக்கையாகினார்கள்.
மஹான்களின் கருணாகடாக்ஷம் ஒரு முறை நம் மேல் விழுந்தாலே போதும்! கோடி கோடி ஜன்ம வினைகளை பொசுக்கிவிடும்! அது நமக்கு ப்ரத்யக்ஷத்தில் தெரியக்கூட தெரியாது.
எந்த பயங்கரமோ, கெட்டதோ எது நடந்தாலும் “அவர் காப்பாத்துவார்” என்று நம்பிவிட்டால், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஶிஶுவைப் போல், நாம் நிஶ்சிந்தையாக [கவலையின்றி] இருக்க, அவர் தாயுமான ஸ்வாமியாக இருந்து நம்மை ரக்ஷிப்பார்! இது ஸத்யம்!
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
compiled & penned by gowri sukumar
Related Posts Plugin for WordPress, Blogger...