Monday, April 1

MGR’s meeting with Maha Periyava

 

குமரேசன் – இவர் பாண்ட்ஸ் கம்பெனியில் சென்னையில் வேலை பார்த்தார் பின்னர் திண்டிவனம் மாற்றப்பட்டார். இவரது முக்யமான வேலைகளில் ஒன்று, தினமும் இரவு வேலை முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், மடத்திற்கு வருவார். இரவு சுமார் எட்டு மணி ஒன்பது மணி ஆகும். பெரியவர் தூங்கும் முன் அவர் அறைக்கு செல்வார். அன்று வந்திருக்கும் மாலை பேப்பர்களை பெரியவருக்கு படித்து காட்டுவார்.
மாலை முரசு , மாலை மலர், மக்கள் குரல், முரசொலி சில நேரங்களில் விடுதலை கூட உண்டு. குமரேசனுடன் பிற்காலத்தில் நானும் ஒன்றாக வேலை செய்தேன் பாண்ட்ஸ்ல் .

ஒருநாள் இரவு பெரியவர் “குமரேசன் வந்துட்டானா?” என்றார். “வர்ற நேரம் தான் .” என்றார் உதவியாளர்.குமரேசன் வந்ததும் “அப்பா குமரேசா உன்ன பெரியவா தேடிண்டு இருக்க போய் என்னனு பாரு.” அன்று வந்த செய்தி தாள்களை படிக்கும் போதுதான் அந்த கேள்வியை பெரியவர் கேட்டார் .

“குமரேசா எனக்கு M G R ஐ பாக்கணும் மாதிரி இருக்கு நீ போய் சொல்லிட்டு வர்றயா?”

MGR உடல் நலம் சரியாகி அமெரிக்காவிலிருந்து திரும்பிய நேரம் அது…

( இடையில் ஒரு செய்தி.: பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும் , MGR திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து வெளியே வர சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இதில் செய்தி என்ன வென்றால் அந்த நேரம் பெரியவர் காமாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதியில் அமர்ந்து ஒருமணி ஜபம் செய்து கொண்டிருந்தார்.இது தினமும் நடக்கும் பூஜை என்றாலும், அன்று அது விசேஷமாக பேசப்பட்டது.)

“இந்த குடுமியோட போனேன்னா அங்க செக்யூரிட்டி கூட என்ன உள்ள விடமாட்டான்.நான் போய் எங்க சொல்லிட்டு வர்றது.” என்றார் குமரேசன்.

“சரி போ அவரா எப்ப வர்றாரோ அப்ப வரட்டும். ஒரு வேளை வந்தாக்க MGR கார் பின் பக்கமா உள்ள வரட்டும், நான் கிணத்துக்கிட்டக்க உக்காந்துக்கறேன், மத்த ரெண்டு சுவாமிகளையும் அங்கேயே வரசொல்லிடலாம். MGR ஆல ஜாஸ்தி நடக்க முடியாது. நாங்க எல்லாம் ஒரே இடத்துலேயே இருக்கோம்.சரிதான ?”

“MGR வரும்போது பாத்துக்கலாம் ” என்றார் குமரேசன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை .காலையில் கூட்டம் அதிகம்.நானும் பெரியவரின் அறை வாசலி நின்று கட்டுபடித்திக்கொண்டு இருந்தேன். அப்போது இதயம் பேசுகிறது மணியனும் , எழுத்தாளர் சுபாஷிணியும் அங்கு வந்தார்கள். அவர்களை கண்ணன் மாமா அழைத்து வந்திருந்தார்.  பெரியவரிடம் வந்தவர்களை பற்றி கூறினார்.
“மணியன் பெரியவா கிட்டக்க தனியா பேசணுமாம் ” என்றார் கண்ணன்.

பெரியவர் சைகை காட்ட ” டேய் அம்பி எல்லாரையும் கொஞ்சம் போக சொல்ல்லுடா அறை மணி கழிச்சி வர சொல்லு ” என்றார் கண்ணன் மாமா என்னிடம். நானும் மற்றவர்களை அனுப்பி விட்டு அங்கே வந்தேன்.
மணியன் பேச தொடங்கினார்.

” பெரியவாள பாக்க MGR ஆசை படறார் . உத்தரவு கொடுத்தா சாயந்திரம் வருவார் ..” என்றார் மணியன் .
நான் வாய் அடைத்துப்போனேன் .சற்று நேரம் ஒன்றும் புரிய வில்லை . இது எப்படி சாத்தியம் நேற்று இரவுதான் பெரியவர் குமரேசனிடம் தனது ஆசையை கூறினார் இன்று MGR தானே வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறாரே ! இதனை என்ன வென்று சொல்வது.

சிறுவன் என்பதால் MGR பார்க்கும் ஆசை மேலோங்கியது.கலக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் MGR வருவது சொல்லப்பட்டது. மடத்திலும் ரகசியம் காக்கப்பட்டது. கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் மிக மிக ரகசியமாக வைத்தார்கள்.வெளியில் வெளிநாட்டு அதிபர் வருவதாக கூறி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தார்கள். நேரம் செல்ல செல்ல ஊரறிந்த ரகசியமாக ஆனது. மடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

மதியம் சுமார் இரண்டு மணிக்கு எல்லாம் அங்கே தங்கி இருந்த என்னை போன்றவர்களை எல்லாம் வெளியே போக சொன்னார்கள். நான் ஓடிபோய் பால பெரியவர் இருந்த மாடி அறைக்கு சென்று பால்கனியில் அமர்ந்து கொண்டு யாரும் பார்க்க வண்ணம் இருந்தேன்.

பெரியவர் என்ன ஆசை பட்டரோ அப்படியே மதியம் மூன்று மணிக்கு கார் பின்பக்கமாக வந்தது . அவர் ஆசை பட்டபடியே கிணத்தடியில் கம்பளம் விரித்து அதில் பலகையில் அமர்ந்திருந்தார்.மற்ற இரண்டு சுவாமிகளும் அங்கேயே வந்து அமர்ந்தனர்.

தங்க நிறமாக MGR , ஜானகி அம்மையாருடன் வந்தார். இருவரும் அமர்ந்தனர் . சுமார் பத்து நிமிடங்கள் ஒரே அமைதி பெரியவரும் தியானத்தில் இருந்தார். MGR கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. ஜானகி அம்மையாரும் கண்களில் கண்ணீர் மல்க பெரியவரின் கால்களில் விழுந்தார். கண்ணன் மாமா அருகில் அமர்ந்திருந்தார். பொதுவாக அவர்தான் VIP க்கள் வரும்போது அருகில் இருப்பார். ஆங்கில மொழிபெயர்ப்பு இத்யாதிகள் செய்வார்.

பத்து நிமிடங்களுக்கு பிறகு பெரியவர் கண்ணை திறந்து உடல் நலம் எப்படி உள்ளது என்று செய்கையில் கேட்க , MGR ம் தலையை ஆட்டி கைகளால் தனது நலத்தை பற்றி பதில் கூறினார். தட்டுகளில் பழங்கள், பூக்கள் , என்று வரிசையாக பத்து பதினைந்து தட்டுகள் வந்தன . எல்லாம் பெரியவர் முன் வைக்க பட்டன. பெரியவர் அவற்றை ஆசையாக தொட்டு பார்த்தார். கண்ணன் மாமா எல்லா பொட்டலங்களையும் பிரிக்க ஒரு குறிப்பிட்ட தட்டு வந்தபோது பெரியவர் MGR இருவருமே திறக்க வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கையை காட்டினார்.

ஜானகி அம்மையாரிடம் அறுவை சிகிச்சை பற்றியும் தற்போது வழங்கப்படும் மருந்துகள் பற்றியும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

“……. டிபார்ட்மென்ட்ல (ஒருவர் பெயரை குறிப்பிட்டு) அவர் இருந்தாரே அவர ஏன் வெளில அனுப்பின ? அவன் நல்லவ நாச்சே ? என்றார் பெரியவர். (அவர் வெளியேற்ற பட்டதற்கான காரணம் பின்னாளில் வேறுவிதமாக கூறப்பட்டது.)

MGR ம் தனது செயலாளரை பார்க்க அவர் ஒரு காரணத்தை சொன்னார். பெரியவரும் அவரை மன்னித்து சேர்த்துக்கொள்ள சொன்னார்… MGR தலை ஐ அசைத்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.

( மறுவாரம் அந்த ……… டிபார்ட்மென்ட மனிதர் தான் மீண்டும் வேலையில் சேர்ந்ததை பற்றி பெரியவரை தரிசிக்க வந்தபோது கூறினார் )

பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார்கள். சுமார் அறை மணிநேரம் நீடித்தது இந்த சந்திப்பு.
பின்னர் எல்லோரும் புறப்பட்டனர்.MGR ன் கார் உள்ளேயே வந்தது அதில் அவர் ஏறிக்கொள்ள கார் மெல்ல நகர்ந்தது.மடத்தின் வெளியே கட்டுகடங்கா கூட்டம். அதனை கண்ட MGR உடல் நிலையை பொருட்படுத்தாமல் காரின் பேன்ட் மேல் ஏறி கை அசைக்க ஒரே விசில் சப்தம்.

நான் மற்றும் சிலர் அங்கு வந்த பழங்கள் மற்றும் பொருட்களை மடத்தின் உக்ராண அறைக்கு எடுத்து சென்றோம்.

மாலை சுமார் ஐந்து மணிக்கு மணியன் மீண்டும் அவசர அவசரமாக வந்தார்.
‘இங்க இருந்த தட்டு எல்லாம் எங்க ..?” என்றார் பதட்டத்துடன். பாலு மாமா காதில் ரகசியமாக என்னமோ கூற அவரும் பெரியவரிடம் அதனை கூறினார்.  பெரியவரும் அமைதியாக “எங்கயும் போகாது உக்ரானதுல தேட சொல்லு ” என்றார் பெரியவர்.

எல்லோரும் உக்றான அறைக்கு ஓடிபோனோம் . மணியன் காட்டிய தட்டை கண்டு பிடித்தோம் அதனை எடுத்து கொண்டு மீண்டும் பெரியவரிடமே வந்தோம். பெரியவர் அதனை தொட்டு பார்த்தார் சிரித்தார். பின்னர் பாலு மாமாவை விட்டு பிரிக்க சொன்னார். இதனைத்தான் முதலில் இருவரும் பிரிக்க வேண்டாம் என்று கண்ணன் மாமாவிடம் கூறினர்.

அதில் இருந்தது ஒரு குறிப்பிட்ட தொகை பணம்.

“இது கானா போயிருந்தா மடதுக்குன்னா கெட்ட பேர் வந்திருக்கும் “என்றார் பாலு மாமா .

“அது எனக்காக அவன் கொடுத்தது எதுவும் கானா போகாது.மடத்து கணக்குல சேக்க சொல்லு ” என்றார் பெரியவர்.

http://mahaperiyavaa.wordpress.com/2013/03/26/mgr-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F/

Related Posts Plugin for WordPress, Blogger...