Wednesday, June 23

Thiruneetru Padhigam | திருநீற்றுப் பதிகம்

Thiru Gnanasambandar’s Thiruneetru Padhigam, consists of 11 hymns in praise of the Sacred Ash Vibhuthi**, which is called Thiru Neeru (திருநீறு) in Thamizh. In these hymns, Sambandar sings the glory & grandeur of the Sacred Ash of the God of Aalavaai (Madurai), smearing which, the then Pandya king was miraculously cured of acute heat & burning disease which engulfed his whole body.

 


Thiruneetru Padhigam - Rendered by students of SāMā Music Repertory Lyrics - Traditional - Thirugnanasambandar Translation - Sri. Rajagopal Ramanan Vocals Arvind Venkatesh Kamaleshwar Mani Sai Maalavika Mayur Davay Violin - Sayee Rakshith Ghatam - Shri Sainath Music Arrangement, Mixing & Mastering - Sai Aditya Visuals - Aravind Davay, Sai Maalavika

Friday, January 8

Maha Periyava Samadhi Day 8th January 1994

 ஊழிக் கூத்து - 1994 ஜனவரி 8-ஆம் தேதி. மஹா பெரியவா மஹா சமாதி ஆன தினம்.

-- By Sri Varagooran Narayanan

பெரியவா என்னை அனாதையாக விட்டுட்டு போயிட்டாளே
திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே
(பகத்ர்களின் கதறல் மேலே)
1994 ஜனவரி 8 ஆம் தேதி ஐயன் மஹா சமாதி அடைந்த பின், வெளி வந்த ஆனந்த விகடனில், அப்போது தொடராக வந்து கொண்டிருந்த 'அன்பே அருளே' கட்டுரையின் 8 ஆவது அத்தியாயம். ஸ்ரீ பரணீதரன் மாமா அவர்கள் கைவண்ணம்...
சாக்கியர் கூத்தை பற்றி தொடர்வதற்குள் ஒரு பிரளய கால ஊழிக்கூத்தே நடந்து முடிந்து விட்டது.
நூற்றாண்டு பிறந்த தின வைபவமாக கடந்த மே மாதம் கனகாபிஷேக காட்சியருளி, கோடிக்கணக்கான பக்தர்களின் நெஞ்சங்களை குளிர்வித்த பெரியவா, ஒரே நொடியில் தமது சரீர உடையை உதறிவிட்டு நம் கண்ணிலிருந்து மறைந்து விட்டார்.
1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி - சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிக்கு துவாதசியன்று பெரியவா மகா சமாதி அடைந்து விட்ட செய்தி ஊரெங்கும், நகரங்கள் என்றும், கிராமங்கள் தோறும், நாடு முழுவதும், உலகம் பூராவும், எட்டி விடுகிறது. கோடிக்கணக்கானவர்களின் நெஞ்சங்கள் பதறி துடித்தன. கண்ணீர் பொங்கி பொங்கி பெருகியது. பாசத்தை வளர்த்து கொண்டு விட்ட பக்தர்கள் குமுறி குமுறி அழுதார்கள்.
'பெரியவா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாளே...'
'திடீர்ன்னு இப்படி ஏமாத்திட்டு போயிட்டாரே...'
'இனிமே பெரியவாளை தரிசனம் பண்ண முடியாதே..அந்த கருணை வடிவத்தை காண முடியாதே...அன்பு சிரிப்பை பார்க்க முடியாதே... அமுத பேச்சை கேட்க முடியாதே...'
அப்பா அம்மா போனப்ப ஆறுதலுக்கு, பெரியவா கிட்டே ஓடி வந்தேன். இப்ப பெரியவாளே போயிட்டாளே யாருகிட்டே போவேன்?
'பெரியவாளுக்கு முன்னாலே நான் போயிடணும் ன்னு பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தேன். என்னாலே யாருக்கு என்ன பிரயோஜனம்?
பெரியவா இருந்தா உலகத்துக்கே க்ஷேமமாச்சே...'
'நான் கொடுத்து வெச்சவன் சார், பெரியவா மௌனவிரதம் ஏற்பதற்கு முன்னே ஒரு நாள் தரிசனத்துக்கு போயி இருந்தேன். நிறைய பேசினார் அமோகமா அனுக்கிரகம் பண்ணினா...இப்படியே பேசாம ரொம்ப நாள் உக்காந்திருப்பார் ன்னு நெனைச்சனே... மோசம் போயிட்டேனே...'
'பெரியவாளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே..நாற்பது வருஷமா பெரியவா கூட இருந்து தொண்டு பண்ணினேன்...எவ்வளவு பேசி இருக்கா...ஒரு தரம் என்னை கோவிச்சிண்டுட்டா...ஏண்டா, உன்னை ரொம்ப கோவிச்சிண்டுட்டேனா? வருத்தமா இருந்ததா ன்னு அடுத்த நிமிஷமே குழந்தை மாதிரி விசாரிச்சாளே...எப்பு கோவிச்சிக்க இப்ப பெரியவா இல்லியே...'
'பெரிய எசமான் உள்ளே படுத்துண்டு இருக்காங்க ன்னு ஒரு தைரியம் இருந்துதுங்க. எட்டி பார்த்தா அவங்க இருக்க மாட்டாங்களே...'
'தெய்வம் என்னை தனியா விட்டுட்டு போயிடுச்சுங்க...உலகமே இருளோன்னு இருக்குதே..'
இப்படி பல்வேறு தரப்பட்ட பக்தர்கள் கதறி கதறி தீர்த்துவிட்டனர். தன் தாய், தந்தை, குழந்தை, நெருங்கிய உறவினர் இவர்களை இழந்து விட்டவர்கள் போல் என்னிடம் தேம்பி தேம்பி அழுதனர். என் சொந்த துயரத்தை உள்ளடக்கி பொங்கிய கண்ணீரை தேக்கி நிறுத்தி, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றிக்கொண்டு இருந்தேன்.
என்னால் தேற்ற முடியாமல் போனது அந்த ஆறு வயது சிறுமியைத்தான்.
'எனக்கு மூணு வயசு இருக்கறப்போ பெரியவா கல்கண்டு கொடுத்தா. அதுக்கப்பறம் பெரியவாளை நான் பார்க்கவே இல்லை. அழைச்சிண்டு போ ன்னு அப்பா கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அழைச்சிண்டு போகலே. இப்போ சாமி கிட்டே போயிட்டாரே.நான் இனிமே பெரியவாளை எப்படி பார்க்கிறது?' என்று அந்த சிறுமி கண்கலங்கிய போது, எப்படி தேற்றுவது என்று கலங்கி போனேன் நான்.
ஜனவரி முதல் தேதியன்று பத்து நிமிடங்கள் மட்டுமே பெரியவா தரிசனம் இருந்திருக்கிறது. அதற்கு பிறகு பொது தரிசனமே இல்லை. உடல்நிலை சரியில்லை. வைத்தியர்கள் அருகிலேயே இருந்து தேவையான சிகிச்சைகள் அளித்து கொண்டு இருந்தார்கள்.
8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உடல் நிலை தேறியது. ஈச்சங்குடியில் வாங்கியுள்ள பெரியவாளின் பூர்வாச்ரம தாயாரின் இல்லத்தில் வைப்பதற்காக தயாரான அப்பா அம்மா படங்கள் அவரிடம் காட்டப்பட்டது. அதை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தார்.
பாலுவிடம், 'நீ கலவை பார்த்திருக்கியோ அங்கே போயிருக்கியோ?' என்று கேட்டிருக்கிறார்.
எதற்கு திடீர் என்று கலவையை நினைத்துக்கொண்டாரோ?
யாரோ ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். 'சௌக்கியமா இருக்கேளா?' என்று உரத்த குரலில் கேட்டிருக்கிறார்.
'பெரியவாளோட பழைய குரல் மாதிரி இருந்தது. எங்களுக்கெல்லாம் ஆச்சிரியமாக போய்விட்டது...' என்றார் திருக்காளாவூர் ராமமூர்த்தி.
'பிரும்ம ஸ்ரீ சாஸ்த்ரிகள்' என்று பெரியவா பெயரிட்ட வேதபுரியை பார்த்து 'கையில் என்ன?' என்று கேட்டாராம். 'பெரியவாளோட மரக்குவளை...அலம்ப எடுத்துண்டு போறேன்...' என்று பதில் கூறி விட்டு போயிருக்கிறார்.
பெரியவா சாதாரணமாக இருப்பதை அறிந்து எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிக்ஷையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். பிறகு படுக்க வைத்து இருக்கிறார்கள். அரை நொடியில்...அனாயாசமாக அப்போது மணி 2.58...
அல்லும் பகலும் ஒவ்வொரு கணமும் கண்ணிமை போல் பாதுகாத்து வந்த திவ்ய சரீரத்தை பார்த்து கதறி தீர்த்து விட்டார்கள் அந்த புண்ணியசாலிகள். மஹா சுவாமிகளுக்கு கைங்கர்யம் செய்தவர்கள் அத்தனை பெரும் பாக்கியசாலிகள். யார் பெயராவது விட்டு போய் விடுமோ என்பதால் அவர்களது பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.
அன்று மதியம் இரண்டரை மணி அளவில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,

பால சுவாமிகளுடன் தாம்பரம் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று வர, பெரியவாளிடம் உத்தரவு பெற்று சென்றதை கண் கலங்கியவாறு கூறினார். சென்னைக்கு செய்தி சென்று, தாம்பரத்தை அடைவதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டு, இரு சுவாமிகளும் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ மடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
துறவியேனும் நாற்பது ஆண்டு கால தொடர்பின் பின்னணியும், பல்வேறு நிகழ்ச்சிகளும் நினைவில் அலைமோத ஸ்ரீ ஜெயேந்திரர் நெஞ்சம் குமுறி கண்ணீர் வடித்ததில் வியப்பென்ன? ஒப்புயர்வற்ற குருவின் உபதேசம் பெற்றதற்கும், பிரம்ம ஞானியிடம் பாடம் பயின்றதற்கும், மகானிடம் அறிவுரை கேட்டதற்கும் முற்பிறவியின் நற்பேறு அன்றோ காரணம் என்ற நன்றி கண்ணீர் அல்லவா அது!
அத்தருணம் உள்ளத்தில் எழுந்த சிந்தனைகள் எல்லாம் கூற முடியாமல் துயரமே உருவாக சோகமே வடிவாக அமர்ந்திருந்தாலும் - மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகளில் தீவிர கவனம் செலுத்தி, பக்தர்களிடம் ஆணைகள் பிறப்பித்துக்
கொண்டு இருந்தார்.
பால சுவாமிகள் அங்கும் இங்கும் எங்கும் காணப்பட்டார். ஒரு கணம் தரிசித்து ஆறுதல் பெற காத்திருக்கும் பக்தர்களை சந்தித்தவாறே, தேவையான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தார்.
என்னை கண்டதும் தனியே அழைத்து சென்று, 'ஏமாந்து போயிட்டோம்...இன்னிக்கு நன்னா தான் இருந்தா. பேசினா, சிரிச்சா, பிக்ஷை பண்ணினா...தைரியமா இருந்தது. தாம்பரம் போயிட்டு வந்துடலாம் ன்னு புறப்பட்டோம்...எதிர்பார்க்காம சேதி வந்தது.'என்று நடந்தவற்றை கூற தொடங்கினார். நடந்து சென்றவாறே ஒருவருக்கு கையசைப்பு, ஒருவரை அருகில் வரசொல்வது, இன்னொருவரை பார்த்து, 'ஒ, வந்திருக்கேளா?' என்று கேட்பது. 'உங்களுக்கு எப்போ தெரியும்?' என்று பரிவுடன் விசாரிப்பது...'பிருந்தாவன வேலை வேகமா நடந்து கொண்டு இருக்கிறதா?'என்று பார்வையிடுவது... பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்தார் பால பெரியவர்.
பக்தர்கள் கூட்டம் பெருகி கொண்டே இருந்தது. வேகமாக நகர்ந்த க்யு இரண்டு கிலோ மீட்டர் வரை நீண்டது. வெகு விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காவலர்கள் பணி போற்றத்தக்கதாய் இருந்தது.
மேடையில் பெரியவாளின் திருமேனி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. நான்கு ஆண்டுகளாக நாம் கண்ட தரிசனம். ஒரே ஒரு வித்தியாசம்...எவ்வித அசைவும் இல்லை...மூலவராகிவிட்ட நிலையில், தெய்வீக சாந்நித்யம் நிலவியது. சுற்றிலும் மடத்து சிப்பந்திகள். அவ்வப்போது, இரு சிஷ்ய சுவாமிகளும் வந்து உடனிருந்தார்கள்.
எதிரில் நகர்ந்த க்யூ வில் கும்பிட்டவர்கள், குமுறி அழுதவர்கள், கன்னத்தில் போட்டு கொண்டவர்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள், இஸ்லாமிய பெருமக்கள், கிறிஸ்துவ சகோதர-சகோதரிகள், வெளிநாட்டினர், பல சமயத்தினர், பல மொழியினர் பொது வாழ்வில் பலதுறை சேர்ந்தவர்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், தள்ளாடும் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர்...
ஒரு புறம் ஒலிப்பெருக்கியில் 'ஜெய ஜெய சங்கர...ஹர ஹர சங்கர...'கோஷம், நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், தேவாரம், திருப்புகழ், சகஸ்ர நாம பாராயணம், வேத முழக்கம்.... மேடை நிரம்ப மணம் பரப்பும் மலர் கொத்துக்கள், வாசனை திரவியங்களின் புகை மண்டலம்...தேவலோக சூழ்நிலை...
பன்னிரண்டு மணிக்கு மேல் மகாபிஷேகம் தொடங்கியது. பிரதம சீடர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், குருவின் திருமேனிக்கு முறைப்படி அபிஷேக, அர்ச்சனைகள் செய்வித்து, தூப தீப கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டது, ஆலயம் ஒன்றில் சிவபூஜை நடைபெற்றது போன்ற உணர்வை தோற்றுவித்தது.
இறுதியாக நான்கு மணியளவில் பிருந்தாவன பிரவேச ஊர்வலம் புறப்பட்டு அருகிலிருந்த மாளிகைக்குள் சென்றது.
வெளியே இருந்தவர்களுக்கு புனித திருமேனியின் கடைசி புண்ணிய தரிசனம் அதுவே



Sunday, November 22

Mercy embodiment

"நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா !" - பாட்டி "இதோ உன் சங்கரன் வந்துட்டேன் பாரு , நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்"- பெரியவா. (வந்துட்டியா சங்கரா" என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள். அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மகாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றுதான் இன்னொருவர் பிடித்தது)
 கட்டுரை ஆசிரியர்-ரா.கணபதி கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம். நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. 

நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை

ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை. ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள் “ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள். வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க் கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். 

முக்யமான ஆலொசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார். அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக! “ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” --- நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர். “ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது! முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள். 

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப்ப்பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்! “ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார். “நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டாள். பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார். என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப்பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள். ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார். “பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

 “ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர். தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும் ,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது

Friday, November 6

Mahima of Mylapore ARULMIGU KARPAGAMBAL as told by Maha Periyava

கேட்பதைத்_தரும் மயிலை_கற்பகாம்பாள்

பெயருக்கு ஏற்றாற் போல் இந்த தலத்தில் பக்தர்கள் கேட்பதை எல்லாம் தருகிற கற்பக விருட்சமாகவே இருக்கிறாள் கற்பகாம்மாள். அதனால் இந்த ஆலயத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.

உங்கள் மனக்குறைகளை எல்லாம் தீர்த்து, வாழ்வில் ஒளியேற்றி பெற்ற பிள்ளையை நலமுடன் பார்த்து, வழிநடத்தும் அன்னையாக இருக்கும் கற்பகத்தை ஒரு முறை வந்து தரிசித்துச் செல்லுங்கள். மனமுருகி வேண்டும் பிள்ளைகளின் கோரிக்கைக்கு நிச்சயம் செவி சாய்ப்பாள் அன்னை.

மயிலாப்பூரில் கபாலீசரம் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் கற்பகாம்பாள்,

கலக்கத்துடன்

தன்னை நாடி வருபவர்களுக்கு எல்லாம் மனதில் தெளிவைக் கொடுத்து புத்துணர்ச்சி தருகிறாள். வாழ்வில் எல்லா சுகங்களையும் தருபவள் அன்னை கற்பகாம்மாள். ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து கற்பகத்தைத் தரிசிப்பவர்களை, மீண்டும் மீண்டும் தன்னை நோக்கி ஆனந்தமாய் ஆலயத்திற்கு வரவழைக்கும் சக்தி படைத்த சாந்த சொரூபிணியாய் கற்பகாம்பாள் சிரித்தப்படியே நின்றிருக்கிறாள்.

‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். பிற ஆலயங்களுக்கு இல்லாத சிறப்பாக திருவல்லிக்கேணியில் இருக்கும் பார்த்தசாரதி, ஒவ்வொரு பெளர்ணமிக்கும் தன் தங்கையைக் காண ஓடோடி இங்கே வருகிறார் என்பது ஐதீகம். அதனால், பெளர்ணமி தினங்கள் இன்னும் சிறப்பு. ஆடிப் பெளர்ணமி கூடுதல் விசேஷம்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மூலவரான சிவனை தரிசித்து விட்டு அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும் படியான அமைப்பு இந்தக் கோயிலின் சிறப்பு.

முதல் முறையாக கற்பகாம்பாளை தரிசனம் செய்பவர்கள், அம்மனை தரிசித்து வெளியில் வந்த பிறகு, அவளின் செளந்தர்யத்தில் மனதைப் பறிகொடுத்து மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்த விழி பார்த்தபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு எப்போதும் கற்பகத்தின் நினைவாகவே இருக்கிறார்கள். மனமுருகி தன்னை நோக்கி வரும் குழந்தைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் தாயாகவே அருள்பாலிக்கிறாள் கற்பகம். சென்னை மட்டுமல்லாமல் கடல் கடந்தும் பிரார்த்தனைகளுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வியந்து அம்பாளின் ஆசியைப் பெற்றுச் செல்கிறார்கள்.

ஒரு முறை தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனின் மருகமளான திரிபுரசுந்த, காஞ்சி மஹா பெரியவாளை மயிலாப்பூர் முகாமில் தரிசித்தார். மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மஹா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி. மஹா பெரியவாளுக்குத் திரிபுரசுந்தரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மகானுக்குத் தான் கொண்டு வந்த பழங்கள், புஷ்பங்கள் போன்ற காணிக்கை பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு நமஸ்கரித்தார். தன் வலக்கையை உயர்த்தி, திரிபுரசுந்தரியை ஆசீர்வதித்து விட்டு “மெட்ராஸ்ல எங்க தங்கி இருக்கே?” என்று கேட்டார் மஹா பெரியவா.

“மயிலாப்பூர்ல தான் பெரியவா” என்றார் திரிபுரசுந்தரி.

“மயிலாப்பூர்ல கோவில்களுக்குப் போற வழக்கம் உண்டா?”

“ஆமாம் பெரியவா. அதுவும் கபாலீஸ்வரர் கோவில்ல கற்பகாம்பாள்ன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்” என்றார் முகம் முழுக்க பரவசத்துடன்.

“கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?” அடுத்த கேள்வி தொடர்ந்தது.

“எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா. தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுன்னு என் மாமனார் (கி.வா.ஜ) சொல்வார்.

“பலே… நான் ஒண்ணு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ” என்றவர், திரிபுரசுந்தரி மட்டுமல்லாமல், தன் அருகே கூடி இருந்த அனைவரையும் நோக்கி பேச ஆரம்பித்தார்.“உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ணின புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே. இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம்.

தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அது போல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் குடுத்துடுவா” என்று மகா பெரியவர் சொன்னபோது, மயிலாப்பூர்வாசிகள் அனைவரும் பரவசம் மேலிட, ஆனந்தக் கண்ணீரி சொரிந்தனர்.

மஹா பெரியவர் தொடர்ந்தார்: “எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும். உன்னை தரிசிச்சிண்டே இருக்கணும்’னு அவகிட்ட கேட்டுக்கோ. அவளோட பார்வையில யாரும் பசியோட இருக்கறதை பாத்துண்டு இருக்க மாட்டா. மயிலாப்பூர்ல இருக்கற எல்லோருக்குமே கற்பகாம்பாள் தான் சாப்பாடு போடறா” என்று மஹா பெரியவா முடித்ததும், கூடியிருந்தவர்கள் ஆனந்தத்தில் கண்களில் நீர் கசிந்தனர்.

அப்படி பக்தர்கள் கேட்பதை எல்லாம் தருகிற கற்பக விருட்சமாகவே வீற்றிருக்கும் கற்பகத்திடம் பிரார்த்தனை செய்து, ஒருமுறை திருக்கோயிலை வலம் வந்து அமர்ந்தால், உங்கள் கஷ்டங்களை எல்லாம் இறக்கி வைத்த உணர்வும், வேண்டியவை நிறைவேறி விட்டது போன்ற பரம திருப்தியும் கிடைப்பது உறுதி. அப்படியான ஒரு புரதான சிறப்புமிக்க, சென்னையின் பக்தி மணம் கமழும் ஆலயமாக இருக்கிறது மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில்.

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம், ராமபெருமான், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற ஆலயம். முருகன் வேல் பெற்ற தலம், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது.

இப்படி பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கோயிலில் கற்பகாம்மாளை தரிசித்தால் உடல் சம்மந்தமான நோய்கள் நீங்கும், திருமணம் கை கூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம், பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது.

அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது. பாடத்தை சரியாக கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார் தானே? அப்படி அம்பாள் மீது கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்’ என்று அம்பாளை சபித்து விட்டார்.

மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்தில் வலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.

ஆலயத்திற்கு செல்லும் போது, பிரகாரம் சுற்றி புராதனமான புன்னை வனநாதரையும், அவரை மயில் உருவில் வழிபடும் அன்னையையும் வணங்க தவறாதீர்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...