Friday, November 6

Mahima of Mylapore ARULMIGU KARPAGAMBAL as told by Maha Periyava

கேட்பதைத்_தரும் மயிலை_கற்பகாம்பாள்

பெயருக்கு ஏற்றாற் போல் இந்த தலத்தில் பக்தர்கள் கேட்பதை எல்லாம் தருகிற கற்பக விருட்சமாகவே இருக்கிறாள் கற்பகாம்மாள். அதனால் இந்த ஆலயத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.

உங்கள் மனக்குறைகளை எல்லாம் தீர்த்து, வாழ்வில் ஒளியேற்றி பெற்ற பிள்ளையை நலமுடன் பார்த்து, வழிநடத்தும் அன்னையாக இருக்கும் கற்பகத்தை ஒரு முறை வந்து தரிசித்துச் செல்லுங்கள். மனமுருகி வேண்டும் பிள்ளைகளின் கோரிக்கைக்கு நிச்சயம் செவி சாய்ப்பாள் அன்னை.

மயிலாப்பூரில் கபாலீசரம் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் கற்பகாம்பாள்,

கலக்கத்துடன்

தன்னை நாடி வருபவர்களுக்கு எல்லாம் மனதில் தெளிவைக் கொடுத்து புத்துணர்ச்சி தருகிறாள். வாழ்வில் எல்லா சுகங்களையும் தருபவள் அன்னை கற்பகாம்மாள். ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து கற்பகத்தைத் தரிசிப்பவர்களை, மீண்டும் மீண்டும் தன்னை நோக்கி ஆனந்தமாய் ஆலயத்திற்கு வரவழைக்கும் சக்தி படைத்த சாந்த சொரூபிணியாய் கற்பகாம்பாள் சிரித்தப்படியே நின்றிருக்கிறாள்.

‘கற்பகம்’ என்றால் ‘வேண்டும் வரம் தருபவள்’ என்று பொருள். பிற ஆலயங்களுக்கு இல்லாத சிறப்பாக திருவல்லிக்கேணியில் இருக்கும் பார்த்தசாரதி, ஒவ்வொரு பெளர்ணமிக்கும் தன் தங்கையைக் காண ஓடோடி இங்கே வருகிறார் என்பது ஐதீகம். அதனால், பெளர்ணமி தினங்கள் இன்னும் சிறப்பு. ஆடிப் பெளர்ணமி கூடுதல் விசேஷம்.

பொதுவாக எல்லா ஆலயங்களிலும் மூலவரான சிவனை தரிசித்து விட்டு அம்பிகையை தரிசிக்கும் படியான அமைப்பு இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கற்பகாம்பாளை தரிசித்து விட்டே கபாலீசுவரரை தரிசிக்கும் படியான அமைப்பு இந்தக் கோயிலின் சிறப்பு.

முதல் முறையாக கற்பகாம்பாளை தரிசனம் செய்பவர்கள், அம்மனை தரிசித்து வெளியில் வந்த பிறகு, அவளின் செளந்தர்யத்தில் மனதைப் பறிகொடுத்து மீண்டும் மீண்டும் திரும்பி பார்த்த விழி பார்த்தபடியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் பிறகு எப்போதும் கற்பகத்தின் நினைவாகவே இருக்கிறார்கள். மனமுருகி தன்னை நோக்கி வரும் குழந்தைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் தாயாகவே அருள்பாலிக்கிறாள் கற்பகம். சென்னை மட்டுமல்லாமல் கடல் கடந்தும் பிரார்த்தனைகளுடன் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து வியந்து அம்பாளின் ஆசியைப் பெற்றுச் செல்கிறார்கள்.

ஒரு முறை தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனின் மருகமளான திரிபுரசுந்த, காஞ்சி மஹா பெரியவாளை மயிலாப்பூர் முகாமில் தரிசித்தார். மகானைத் தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் நின்று, மெள்ள மெள்ள ஊர்ந்து சென்று மஹா பெரியவாளின் திருச்சந்நிதியை அடைந்தார் திரிபுரசுந்தரி. மஹா பெரியவாளுக்குத் திரிபுரசுந்தரி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

மகானுக்குத் தான் கொண்டு வந்த பழங்கள், புஷ்பங்கள் போன்ற காணிக்கை பொருட்களை ஒரு மூங்கில் தட்டில் வைத்து விட்டு நமஸ்கரித்தார். தன் வலக்கையை உயர்த்தி, திரிபுரசுந்தரியை ஆசீர்வதித்து விட்டு “மெட்ராஸ்ல எங்க தங்கி இருக்கே?” என்று கேட்டார் மஹா பெரியவா.

“மயிலாப்பூர்ல தான் பெரியவா” என்றார் திரிபுரசுந்தரி.

“மயிலாப்பூர்ல கோவில்களுக்குப் போற வழக்கம் உண்டா?”

“ஆமாம் பெரியவா. அதுவும் கபாலீஸ்வரர் கோவில்ல கற்பகாம்பாள்ன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம்” என்றார் முகம் முழுக்க பரவசத்துடன்.

“கற்பகாம்பாள்கிட்ட என்ன வேண்டிப்பே?” அடுத்த கேள்வி தொடர்ந்தது.

“எப்பவும் உலக நலனுக்காகத்தான் வேண்டிப்பேன் பெரியவா. தெய்வங்கள்கிட்ட நமக்குன்னு எதுவும் கேக்கக் கூடாதுன்னு என் மாமனார் (கி.வா.ஜ) சொல்வார்.

“பலே… நான் ஒண்ணு சொல்றேன். நன்னா கேட்டுக்கோ” என்றவர், திரிபுரசுந்தரி மட்டுமல்லாமல், தன் அருகே கூடி இருந்த அனைவரையும் நோக்கி பேச ஆரம்பித்தார்.“உன்னோட போன பிறவிகள்ல நீ பண்ணின புண்ணியத்துனாலதான் இப்ப மயிலாப்பூர்ல வசிக்கறே. இங்க இருக்கற கற்பகாம்பாள் யாரு தெரியுமா? கற்பக விருட்சம்.

தேவலோகத்துல கற்பக விருட்சம்னு ஒரு மரம் இருக்கு. அதுக்கு அடியில நின்னுண்டு யார் என்ன கேட்டாலும் அந்த விருட்சம் ஒடனே குடுத்துடும். அது போல இந்த கற்பகாம்பாள் சந்நிதிக்கு முன்னாடி நின்னுண்டு நீ என்ன கேட்டாலும் குடுத்துடுவா” என்று மகா பெரியவர் சொன்னபோது, மயிலாப்பூர்வாசிகள் அனைவரும் பரவசம் மேலிட, ஆனந்தக் கண்ணீரி சொரிந்தனர்.

மஹா பெரியவர் தொடர்ந்தார்: “எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும். உன்னை தரிசிச்சிண்டே இருக்கணும்’னு அவகிட்ட கேட்டுக்கோ. அவளோட பார்வையில யாரும் பசியோட இருக்கறதை பாத்துண்டு இருக்க மாட்டா. மயிலாப்பூர்ல இருக்கற எல்லோருக்குமே கற்பகாம்பாள் தான் சாப்பாடு போடறா” என்று மஹா பெரியவா முடித்ததும், கூடியிருந்தவர்கள் ஆனந்தத்தில் கண்களில் நீர் கசிந்தனர்.

அப்படி பக்தர்கள் கேட்பதை எல்லாம் தருகிற கற்பக விருட்சமாகவே வீற்றிருக்கும் கற்பகத்திடம் பிரார்த்தனை செய்து, ஒருமுறை திருக்கோயிலை வலம் வந்து அமர்ந்தால், உங்கள் கஷ்டங்களை எல்லாம் இறக்கி வைத்த உணர்வும், வேண்டியவை நிறைவேறி விட்டது போன்ற பரம திருப்தியும் கிடைப்பது உறுதி. அப்படியான ஒரு புரதான சிறப்புமிக்க, சென்னையின் பக்தி மணம் கமழும் ஆலயமாக இருக்கிறது மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில்.

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம், அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்ட தலம், பிரம்மன் தன் ஆற்றலை திரும்பப் பெற்ற தலம், ராமபெருமான், சுக்ரன் வழிபட்டு பேறு பெற்ற ஆலயம். முருகன் வேல் பெற்ற தலம், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பாடிய தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது.

இப்படி பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த கோயிலில் கற்பகாம்மாளை தரிசித்தால் உடல் சம்மந்தமான நோய்கள் நீங்கும், திருமணம் கை கூடும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம், பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது.

அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது. பாடத்தை சரியாக கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார் தானே? அப்படி அம்பாள் மீது கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்’ என்று அம்பாளை சபித்து விட்டார்.

மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலத்தில் வலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர்.

பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் இத்தலம் திருமயிலாப்பூர் என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.

ஆலயத்திற்கு செல்லும் போது, பிரகாரம் சுற்றி புராதனமான புன்னை வனநாதரையும், அவரை மயில் உருவில் வழிபடும் அன்னையையும் வணங்க தவறாதீர்கள்.
Bookmark and Share

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...