பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது.
ஜாதி மற்றும் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டம் என்பதால் இதில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தாஸியா பாவுரியும் ஒருவர். ஆனால், தாஸியா பாவுரியின் பக்திக்கு இந்த பாகுபாடெல்லாம் அணை போட்டுவிட முடியுமா? அந்த பிரார்த்தனை கூடத்தின் தொலைவில் நின்று, காதுகளை தீட்டிக்கொண்டு பாகவதத்தை கேட்பார். அந்த காலத்தில் ஜகந்நாதரின் புகழ் பெற்ற பக்தர்களாக விளங்கிய ‘பஞ்ச சேவகர்கள்’ என்பவர்கள் மிகவும் பிரசித்தம். அவர்களுள் ஜகந்நாத தாஸ் என்பவரை நம் தாஸியா தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் பலிகான் கிராமத்தை சேர்ந்த சிலர் பூரிக்கு யாத்திரை புறப்பட்டனர். தாஸியாவுக்கும் அவர்களோடு போகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரது பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. எனவே அவர்களிடம் ஒரே ஒரு தேங்காயை கொடுத்து பூரியில் ஜகந்நாதரிடம் சேர்பித்துவிடுங்கள் அதுவும் பூரி கோவிலின் நான்கு நுழைவாயில்களில் ஒன்றான அருணை ஸ்தம்பத்தில் தான் இதை சேர்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாதரே அதை பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
“என்னப்பா இது இவர் இப்படி கயிறு திரிக்கிறான்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், தாஸியாவை நோக்கி “யோவ் என்னய்யா தமாஷ் பண்றே? என்னவோ உன் தேங்காய்க்காகத் தான் அங்கே ஜகந்நாதர் காத்துக்கிட்டுருக்குற மாதிரி சொல்றே… போய் வேலையை பாரு என்று நகைத்தனர்.
அவர்களில் ஒருவர், “தாஸியா சொல்றது போல நடக்குதான்னு பார்ப்போமே…. இதுனால நமக்கு என்ன நஷ்டம். ஒருவேளை அப்படி நடந்துச்சுன்னா அதை நேர்ல பார்க்குற பாக்கியம் கிடைக்குமே ” என்றார்.
இதையடுத்து அவரிடம் தேங்காய் பெற்றுக்கொண்டு பூரிக்கு புறப்பட்டனர் அந்த குழுவினர். அங்கே பூரியை சென்றடைந்தபின்னர், அருணை ஸ்தம்பத்தின் கீழே அதை வைக்க, அடுத்த நொடி அந்த தேங்காய் மாயமாய் மறைந்துவிட்டது. அனைவரும் சிலிர்த்துப் போய்விட்டனர்.
இவர்கள் ஊருக்கு திரும்பி வந்தவுடன், தாஸியா கிட்டத்தட்ட ஒரு கதாநாயகன் போலானார். தாஸியாவுக்கு ஜகந்நாதரின் மீதிருந்த பக்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் ஜகந்நாதரை தரிசிக்க கால்நடைப் பயணமாக கிளம்பியே விட்டார். அவரிடம் நெசவு செய்து சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை கொண்டு ஜகந்நாதனுக்கு ஏதேனும் வாங்கிச் செல்லவேண்டும் என்று விரும்பினார். அந்த நேரம் பார்த்து ஒரு மாம்பழ வியாபாரி கூடையில் மாம்பழங்களை சுமந்தபடி சென்றான். அத்தனையும் உயர் ரக மாம்பழங்கள். அதை பார்த்த தாஸியா ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை வாங்கிச் செல்ல விரும்பினார். தன்னிடம் இருந்த பணம் அத்தனையும் கொடுத்து அந்த பழங்களை (கிட்டத்தட்ட 40 பழங்கள் இருந்தன) கூடையோடு சேர்த்து விலைக்கு வாங்கி தனது தலையில் சுமந்தபடி பூரி நோக்கி நடக்கலானார்.
பூரியில் ஜகந்நாத ஷேத்ரத்தில் சிம்மத் துவாரத்தை அடைந்தபோது, ஆலயத்தில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் பிராமணர்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு, நாங்கள் தான் ஜகந்நாதருக்கு மாம்பழங்களை படைப்போம் எங்களிடம் கொடுத்துவிடு என்று நச்சரித்தனர். இதன் பொருட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாஸியா, “நீங்கள் யாரும் என் ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை படைக்கத் தேவையில்லை” என்றார்.
“அப்போது பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும்? இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய்? இதை இறைவனுக்கு என்று கொண்டு வந்துவிட்டு அவருக்கு படைக்காமல் நீ திருப்பி எடுத்து சென்றால் இதை யாரும் தொடமாட்டார்கள்” என்றனர்.
தாஸியா ஒன்றும் பேசவில்லை. ஒரு பத்து அடி பின்னே வந்தார். கீழே கூடையை வைத்தார்.
கோபுரத்தின் மீதிருந்த நீல சக்கரத்தை பார்த்தபடி, “ஜகந்நாதா இவை உனக்கு உரியவை. உனக்காக நான் கொண்டு வந்தவை. இவர்கள் இதன்பொருட்டு ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள்? இவைகளை நானே உனக்கு தருகிறேன். அன்போடு ஏற்றுக்கொள்” என்று கூறி, இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினார். அடுத்த நொடி அவரது கைகளிலிருந்து இரண்டு மாம்பழங்களும் மாயமாய் மறைந்துவிட்டன.
இப்படியே அனைத்து மாம்பழங்களும் தாஸியா எடுத்து நீட்ட நீட்ட மாயமாய் மறைந்துவிட்டன.
சுற்றியிருந்த அனைவரும் இதை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்தனர். கண்ணெதிரே நடைபெற்ற இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை. “நீ ஏதோ மந்திர தந்திர வித்தைகளை செய்து மாம்பழங்களை மாயமாய் மறையச் செய்துவிட்டாய். நீ ஒரு சூனியக்காரன்” என்றனர்.
“என்னது நான் சூனியக்காரனா? உள்ளே சென்று ஜகன்னாதனின் சன்னதியில் பாருங்கள்” என்றார். அனைவரும் மூலஸ்தானத்தை நோக்கி ஓட்டமாய் ஓடினர். என்ன அதிசயம்… இவர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே செல்லும் வகையில், ஜகந்நாதரின் முன்பு மாம்பழக் கொட்டைகளும், தோல்களும் காணப்பட்டன.
அனைவரும் தாஸியாவின் கால்களில் வீழ்ந்தனர்…..!
“தாஸியா நீ அப்பழுக்கற்ற பக்தன், உண்மையான தொண்டன், உன் பக்தியின் மூலம் இறைவனை அடிமைப்படுத்தியவன், உன் பக்திக்கு முன்னாள் நாங்கள் ஒன்றுமேயில்லை எங்களை மன்னித்துவிடு” என்று கூறி, ஜகந்நாதரின் திருவுருவத்தின் மீதிருந்த மாலையை எடுத்து அவருக்கு சூட்டி மரியாதை செய்தனர்.
இதைகக் கேட்ட தாஸியா அவர்களின் பாதங்களில் தான் பதிலுக்கு வீழ்ந்து, அவர்களின் பாத தூளியை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு “ஜகந்நாதனை தினசரி தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற, அவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற நீங்கள் தானே என்னை விட பாக்கியசாலிகள்” என்றார்.
இராம க்ருஷ்ணா ஹரி பாண்டுரங்க ஹரி
No comments:
Post a Comment