Saturday, January 16

Parvatha Malai and Maha Periyava

பருவதமலையில் நடந்த அற்புதம் !!!


திருவண்ணாமலை அருகில் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கும் பருவதமலை - பகலிலேயே மக்கள் போக முடியாத ஒரு அடர்ந்த மலை பகுதி. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஈஸ்வரனின் பெயர் மல்லிகார்ஜூனர் (பர்வதமலை. சுவாமி), ஈஸ்வரி - பிரமராம்பிகை.

திருவண்ணாமலையில எப்படி பௌர்ணமியன்று கிரிவலம் போகிறோமோ, அதே போல margazhi மாதம் முதல் தேதி மக்கள் பருவத மலையை பிரதட்சணம் செய்வதும் வழக்கம்.

ஸ்ரீ காஞ்சி ஆச்சாரியார் எப்போதெல்லாம் அந்தப் பக்கமாக போறாரோ அப்போல்லாம் அந்த மலையை பிரதட்சணம் பண்ணிடுவார். 

ஒருதரம் மார்கழி மாசம் ஒண்ணாந்தேதி அன்னிக்கு பர்வத மலையை வலம் வரணும்னுட்டு முதல்நாளே போய்பக்கத்துல முகாம் போட்டுட்டா பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்துலயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம்பேர் கிரிவலம் பண்ணுவா. அதனால விடியற்காலம்பற மூணு மணிக்கே பிரதட்சணம் பண்ண ஆரம்பிச்சுடணும்னு தீர்மானிச்சார், ஆசார்யா. 

அதுக்கப்புறம் பெரியவா கூட வந்த சிப்பந்திகள் எல்லாரும் போஜனம் பண்ணிட்டு தூங்கப் போயிட்டா. பாதிராத்திரி இருக்கும். சிப்பந்தியில ஒருத்தர் திடீர்னு எழுந்து உட்கார்ந்தார். தான் எழுந்துண்டதோட இல்லாம மத்தவாளையும் எழுப்பினார். பெரியவா என் சொப்பனத்துல வந்து, “நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே… அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?’ன்னு கேட்டார்னு சொன்னார்.

உடனே இன்னொருத்தர், “எனக்கும் அதேமாதிரி கனவு வந்துது. பண்டிகை, நாள் நட்சத்திரம்னாதான் இனிப்புப் பண்டமெல்லாம் பண்ணணுமா? அன்னதானத்துலயும் இனிப்புப் பலகாரத்தை சேர்த்துக் குடுத்தா, பாவம் ஏழைகள் சந்தோஷப்படுவா இல்லையா?’ எப்படின்னு பெரியவா சொல்றமாதிரி இருந்துது. அவ்வளவுதான் எல்லாரும் எழுந்துண்டுட்டா.

கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணறது. அதுவும் இனிப்போட தர்றதுன்னு தீர்மானிச்சா. ஆனா, பரிசாரகர் சொன்ன ஒரு விஷயம் அவாளை யோசிக்க வைச்சுது. முகாம்ல கொஞ்சமே கொஞ்சம்தான் அரிசி இருக்கு. அதைவைச்சுண்டு, எப்படி லட்சக்கணக்கானவாளுக்கு அன்னதானம் பண்ண சமைக்கறதுன்னுதான் கேள்வி எழுப்பினார் அவர்.

அந்த அர்த்தராத்திரியில எங்கேயும் போய் அரிசி கேட்கவோ, வாங்கிண்டு வரவோ வசதி கிடையாது. அன்னதானம் பண்ணணும்னா, விடியற்காலம்பறவே சமையல் பண்ணிடணும் அதனால என்ன செய்யறதுன்னு அவா யோசிச்சுண்டு இருந்தப்போ, முகாமோட வாசல்ல மாட்டுவண்டி ஒண்ணு வந்து நின்றது. அதுல இருந்து இறங்கிவந்த ஒருத்தர், “என்ன ஆச்சர்யம்! எல்லாரும் தூங்கிண்டு இருப்பேள்னு நினைச்சேன். முழிச்சுண்டு இருக்கேளே. நான் பக்கத்து ஊர்க்காரன். பரமாசார்யா பிடி அரிசித் திட்டத்தை அறிவிச்சதுல இருந்து எங்க ஊர்க்காரா எல்லாரும் அதைத் தட்டாம செஞ்சுண்டு இருக்கோம். மூணுமாசமா சேர்த்த அரிசியை காஞ்சிபுரத்துல கொண்டு வந்து தரலாம்னு நினைச்சுண்டு இருந்தப்போ, ஆசார்யா இங்கேயே முகாம் போட்டிருக்கான்னு தெரிஞ்சுது. அதான் இங்கேயே கொடுத்துடலாம்னு கொண்டு வந்தேன்’ சொல்லிவிட்டு அரிசி மூட்டைகளை இறக்கிவைக்க ஆரம்பிச்சார்.

கிட்டத்தட்ட முப்பது மூட்டை அரிசியோட சர்க்கரை, உளுந்தும் இறக்கிவைச்சார். அதெல்லாமும் சிலர் குடுத்ததா சொன்னார். “விடியற்காலம்பறவே எனக்கு முக்கியமான வேலை இருக்கு. அதனால ஆசார்யாகிட்டே என்னோட வந்தனத்தை சொல்லிடுங்கோ, நான் புறப்படறேன்’னு சொன்னவர் பதிலுக்குக்கூட காத்துண்டு இருக்காம புறப்பட்டுப் போயிட்டார்.

அன்னதானத்துக்கு ஆசார்யாளோட அனுகிரகம் கிடைச்சுடுத்துங்கறதைப் புரிஞ்சுண்டு மளமளன்னு அடுப்பைப் பத்தவைச்சு சமையலைத் தொடங்கினா எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைச்சுட்டதால ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம்னு தீர்மானிச்சு பண்ண ஆரம்பிச்சுட்டா.

எல்லாரும் சமைக்கறதுல தீவிரமா இருந்ததுல மணியைக்கூட பார்க்கலை.
தீர்மானிச்சபடி மூணுமணிக்கு டாண்ணு பிரதட்சணத்தை ஆரம்பிச்சட்ட ஆசார்யா, சமைச்சுண்டு இருந்தவா பக்கம் மெதுவா திரும்பினார். “முப்பது மூட்டை அரிசி… அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!’ சொன்னவர், மௌனமா புன்னகைச்சட்ட நடக்க ஆரம்பிச்சுட்டார்.

வந்தது முப்பது மூட்டை அரிசிங்கறதை யாருமே மகா பெரிவா கிட்டே சொல்லலை. அது மட்டுமல்லாம, அன்னதானம் பண்ணணும்னு ஆசார்யா நேரடியா யார்கிட்டேயும் சொல்லலை. சொப்பனத்துல வந்த காட்சியை வைச்சுதான் பாதிராத்திரியில தீர்மானமே பண்ணினாங்க. இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிஞ்சுது?

இதையெல்லாம்விட புரிஞ்சுக்கவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைச்ச முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியா கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் குடுத்ததோட தீர்ந்துடுத்து. அதுக்கப்புறம் யாரும் வலமும் வரலை. அன்னமும் மீறலை. கிரிவலம் வர்றவாளுக்கு அன்னதானம் பண்ணணும்கறதை தீர்மானிச்சது யாரோ, அவரேதான் அதுக்கான அரிசி உள்ளிட்ட எல்லாத்தையும் கொண்டுவந்து சேர்த்திருக்கார்ங்கறது அப்போதான் எல்லாருக்கும் புரிஞ்சுது. தெய்வம் அசரீரியாவோ கனவுல வந்தோ பேசும்னு சொல்லுவாளே, அதேமாதிர பரமாசார்யாளும் தன்னோட தீர்மானத்தை மத்தவாளுக்கு எந்த ரூபத்துல வந்து வேணும்னாலும் தெரியப்படுத்துவார்ங்கறதையும் உணர முடிஞ்சது !!!
Bookmark and Share
Related Posts Plugin for WordPress, Blogger...